நரியும் கரியும்

பண்டைய அரசர் காலம். அரசர் போர் புரிய யானைப் படை, குதிரைப் படை, காலாட்படை எனப்பல படை பிரிவுகள் உண்டு. யானைப் படையில் தான் அரசன் போர் செய்வது வழக்கம். அரசனின் யானைப்படைக்கு பல வருடங்கள் பயிற்சி அளித்து, பற்பல விதங்களில் சோதித்து பின்னரே அரசனின் யானைப்படை உருவாக்கப்படும்.

குதிரைகளின் கொட்டிலும், யானைகளின் கொட்டிலும் அருகருகே இருக்கும். யானைகளும் குதிரைகளும் அரண்மனையின்  கொட்டிலில் வைத்து  பராமரிப்பர். அந்த கொட்டிலுக்கு மிகுந்த காவல் இருக்குமாம். அப்படிபட்ட கொட்டிலில் நடந்த ஒரு நிகழ்வு தான் இன்றைய செய்தி.

இருந்த குதிரைகளில் ஒரு திமிர் பிடித்த குதிரையும் உண்டு. அந்த குதிரை சில நாட்களுக்கு முன்னர் அரசன் வேட்டைக்கு சென்ற போது, அரசன் வேட்டை செய்யும் வேளையில் கூடாரம் விட்டு சென்று ஒரு நரியை கண்டு அதனோடு நட்பு பாராட்ட ஆரம்பித்தது. அரசன் எப்போதெல்லாம் வேட்டைக்கு சென்றாலும் தன் நண்பனை தேடி குதிரை சென்றுவிடும். நரியும் நட்பின் இலக்கணமாய் அந்த குதிரையோடு பழகி வந்தது.

இந்த குதிரையின் பெயர் மாருதன். நரியின் பெயரோ வேட்டாளன். 

யானைகள் பலஉணவு உண்டு பிளிரல்கள் வர, அருகில் உள்ள குதிரை கொட்டிலில் இருந்த சில குதிரைகள் கொள்ளுணவு உண்டு கனைக்க, வழக்கம் போல் பராமரிப்பவர் குதிரைகள் சற்று வெளியில் உலாவி வர அவிழ்த்து விட அவை கனைத்துக் கொண்டு வெளியே வந்தன. மாருதன் வெளியே வந்து அங்கு அரசன் ஏறும் யானையைக் கண்டது. யானையின் பெயர் நளவீரன். மாருதன் நளவீரனைக் கண்டு, ஏளனமாய், நீ யென்ன பெரிய உருவமாக இருந்தாலும், நானே அரசனின் செல்ல குதிரை. என்னை அரசன் வேட்டைக்கு அழைத்து செல்கிறார். எனக்கு சிறந்த பட்டுத் துணி போர்த்தி, கடந்த அரச விழாவில் என்னை குறித்து புகழாரம் சூடினார்.

அதைக்கேட்டு நளவீரன், பேசாமல் போ மாருதா. என் கோபத்திற்கு ஆளாகாதே. 

மாருதனோ, ஏன் நளவீரா, நீ மிக மிடுக்காய் இருந்தாயே. போர் செய்து பல நாள் ஆயிற்றே. என்றான்.

நளவீரன் பதிலாக, சென்ற போரில் பல வேல்படை வீரர்களை எதிர்கொண்டு மன்னன் மேல் ஒரு வேலும் படாதபடி காத்தேன். எனக்கு ஒரு புகழாரம் இல்லை. வேட்டைக்கு சென்ற உனக்கு புகழாரம்.

மாருதனோ, ஏன், வேட்டையென்ன மிக எளிதானதோ. காட்டு மிருகங்கள் பல வரும் போது கலங்காமல் நிற்க வேண்டும்.

நளவிரன் பதிலாக: காட்டு மிருகங்கள் வரும். ஆனால் அவைகளிடம் ஆயுதம் இல்லாததால், உன்மேல் விழுமுன்னரே மன்னரும் வீரரும் ஆயுதம் கொண்டு வீழ்த்திவிடுவரே. ஆனால், போரில் பல எதிரி வீரகள் வேலேந்தி வாளேந்தி வருவர். அந்த வேல், வாள் கண்டு அஞ்சாது நான் மன்னரை காக்க வேண்டும். என்மேல் வேல் எய்தாலே, என்னை வீழ்த்தினாலே மன்னரை அவர்கள் வீழ்த்த முடியும். ஆகவே, என் பணியே சிறந்தது.

மாருதன் ஏளனமாய்... என்னவோ வீரர்கள் முன் நிற்பது பெரிய வேலையோ. நீ நாளை என்னோடே அரண்மனை அருகில் உள்ள காட்டிற்கு வா. ஒரு நரிமுன் கூட நீ நிற்க மாட்டாய். என்றது.

நளவீரன் பதிலாக: ஒரு கைப்பார்ப்போம். நாளை எங்களை காட்டின் அருகில் ஓடையில் குளிக்க கூட்டிச் செல்கிறான் பாகன். அவன் உண்டு களைப்பில் உள்ள போது, வருகிறேன்.

இதைக் கேட்டு மாருதன், வா ஒரு கைப் பார்ப்போம் என்று கூறியது.

மாருதன் காட்டிற்குள் சென்று வேட்டாளனை கண்டு தான் நளவீரனிடம் உரையாடியதை கூற, வேட்டாளன் யானையின் பலத்தின் முன் நான் சிறு நரியே. எனினும் என் நண்பனின் அவாவிற்காய் நான் ஒத்துக் கொள்கிறேன், என்றது.

வேட்டாளன் சண்டைக்கு சில விதிகள் செய்தது.

1. உயிருக்கோ அல்லது உடலுக்கோ எந்த வித சேதமும் ஏற்படக் கூடாது
2. இருவரும் எந்த வியூகமும் செய்யலாம்
3. தோல்வியுற்றவர் பின்னர் ஒரு நாளில் மீண்டும் சண்டைக்கு அழைக்கலாம்

இவையே அந்த விதிகள்.

மாருதன் விதிகளை கேட்டு நளவீரனிடம் சொல்ல, அந்த விதிகளுக்கு ஒப்புக் கொண்டது நளவீரன்.

அடுத்த நாள், இரண்டு மாதமாய் அடித்த வெய்யிலில், காட்டில் நிலமெல்லாம் உலர்ந்து தரை இருக நின்று இருக்க, களத்தில் நளவீரனும் வேட்டாளனும் நிற்க, வியூகம் அமைத்து நரி பின்னே வந்து தாக்க, பின் திரும்பி நளவீரன் தன் துதிக்கையால் ஒரே தூக்காய் தூக்கி எறியப் போக, மாருதன் விதிகளை மீறாதே எனக் கனைக்க, அப்படியே விட்டது நளவீரன். 

மாருதனும் வேட்டாளனும் தோல்வியை ஒப்புக்கொண்டு சென்றனர். பின்னர் வந்த மாரி காலத்தில், நரி தன் நண்பனான குதிரையிடம், இதோ வந்தது மாரிகாலம், நான் என் புதுவியூகத்தில் நளவீரனை வீழ்த்தும் காலம் என்று கூறி, மாருதனை தனக்கு உதவி செய்யக் கேட்டது.

போரிடும் களத்தில் இரண்டு மணி நேரம் தன் வலிய கால்களால் மாருதன் மிதித்து, களத்தில் மேல் மணல் உதிரச்செய்ய வைத்தது. மாரிகால மழை அங்கு இரண்டு நாள் தொடர்ந்து பெய்ய, சேரானது களம்.

இப்போது நளவீரனை சண்டைக்கு அழைத்தது வேட்டாளன். இதோ நாம் தான் முன்னமே வெற்றி கொண்டோமே என்று திமிராய் சென்றது நளவீரன்.

களத்தில் இறங்க, நளவீரனின் கால்கள் சேறில் அமிழ, அதனால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. நரியோ, தன் சிறு உடம்பில் சேற்றை இறைத்துக் கொண்டு பின்னும் இடது வலத்திலும் தாக்க, நளவீரனோ தன் கால் சேற்றில் அமிழ்ந்ததால் திரும்ப ஏலாது தன் தோல்வியை ஒப்புக் கொண்டது.

நீதி:

காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா
வேலாள் முகத்த களிறு  

                                                                 திருக்குறள் 500

பொருள்: வேலேந்திய வீரர்களை வீழ்த்துகின்ற ஆற்றல் படைத்த யானை, சேற்றில் சிக்கி விட்டால் அதனை நரிகள் கூடக் மேற்கொண்டு விடும்.


No comments:

Post a Comment