ஒரு ஊரில் இடும்பன் என்ற மனிதன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு இப்பெயர் சூட்டியது அவனின் பெற்றோர் அல்ல. அவனுக்கு பெற்றோர் இட்ட பெயர் திருவரசு. ஆனால் ஊரார்க்கு அவன் செய்யும் இடுக்கண்களால் இன்னல்களால் அவனுக்கு இடும்பன் என்றே பெயர் சூட்டினர் ஊர் மக்கள்.
அவனைக் கண்டாலே மக்கள் ஓட்டம் பிடிப்பர். ஏனென்றால் அவன் வழியில் வரும் மக்களை அவன் ஏதாவது செய்து தங்களுக்கோ அல்லது உடமைக்கோ சேதம் விளைவிப்பான்.
ஒரு நிகழ்வில் இடும்பனுக்கே ஒருவர் இன்னல் கொடுத்தார். அந்திகழ்வைக் காண்போம்....
ஒரு வர்த்தகர் தன் காசுப்பை கொண்டு வருகிறார். அவர் அயலூரார் என்பதால் வழியில் வரும் இடும்பனைக் குறித்து அறியாதவராய், அவனிடமே கேட்டார், செல்லூர் வழி. இடும்பனோ மிகவும் நெடிய காட்டுப்பாதையைக் காண்பித்து அதுதான் வழி, ஆனால் நீங்கள் காலையில் தான் செல்ல வேண்டும், ஏனெனில் காட்டில் புலி நடமாட்டம் அதிகம், இப்போது மாலை வேளை, நீங்கள் சென்றால் புலி கடித்துவிடும் என்று அச்சுறுத்தி அவரை அந்த ஊர் சத்திரத்தில் தங்கி காலையில் செல்ல ஆலோசனை கூறினான்.
அவரும் சத்திரம் நோக்கி நடக்க, அவருக்கு உதவியாக வருகிறேன் என்று கூடவே வந்தான் இடும்பன். வழிநெடுக யாருமே வராததைக் கண்ட வர்த்தகர், இவ்வூரில் ஏன் யாருமே வெளியில் வருவதில்லை? என்று வினவ, புலிகள் மாலையில் ஊருக்குள் வருவதுண்டு, ஆதலால் தான் ஊர்மக்கள் வெளியே வருவதில்லை என்று கூறினான். அவருக்கு தெரியவில்லை அவ்வூரார், இடும்பனைக் கண்டு மக்கள் அவனைத் தவிர்க்க வேறு வழியே சென்றது.
சத்திரம் நெருங்குகையில் இடும்பன் அவருக்கு சத்திரத்தைக் காட்டிவிட்டு தன் வழியே சென்றான். வர்த்தகர், "சத்திரக்காரரிடம் சொல்லிவிட்டு போங்கள்" எனக்கூற, இடும்பன் "எனக்கு வேறு வேலை உள்ளது, நான் விரைவாகச் செல்ல வேண்டும்" என்று கூறினான் இடும்பன். "உதவியதற்கு நன்றி" என்று வர்த்தகரின் நன்றியைக் கூட பொருட் படுத்தாமல் சென்று விட்டான் இடும்பன்.
சிறிது தூரம் சத்திரம் நோக்கி நடந்த வர்த்தகர் சுற்றிப் பார்த்தார். அந்த இடத்தை எங்கோ பார்த்திருக்கிறோமே என்று வியந்தார்... இவ்வூரில் ஒரே மாதிரியான வீதிகள் உள்ளது என்று வியந்துக் கொண்டே சத்திரம் சென்று அறை வாடகைக்கு எடுத்தார். சத்திர அறையின் சாளரம் வழியேக் கண்ட போது மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்க, அவருக்கு வியப்பு தட்டியது. சத்திரக்காரரை சந்தித்து அவர் உரையாடினார்
வர்த்தகர்: ஐயா, இவ்வூரில் புலி நடமாட்டம் அதிகம் என்று என்னை இங்கு அழைத்து வந்த மனிதன் கூறினான், ஆனால் மக்கள் நடமாட்டம் வீதியில் உள்ளதே?
சத்திரக்காரர்: புலியா? அப்படி ஒன்றும் இல்லையே!
வ: என்னை அழைத்து வந்த மனிதன் அப்படித்தானே சொன்னார்
ச: இங்கிருந்து காட்டிற்கு 20 மைல்கள் செல்ல வேண்டும். வழி நெடுக பல ஊர்கள் உண்டு. அந்த ஊரெல்லாம் விட்டு இங்கே எப்படி ஐயா புலி வரும்? ஏதோ உங்களை ஏமாற்ற செய்த நாடகம் என்று தான் நினைக்கிறேன்,
வ: அது சரி, செல்லூர் இங்கிருந்து அந்தக் காட்டை தாண்டித்தானே செல்ல வேண்டும்?
ச: என்ன ஐயா.... செல்லூரில் தான் நீங்கள் தங்கியிருக்கின்றீர். மறுபடியும் செல்லூர் போக வழி கேட்கிறீர். உங்களை ஏமாற்றியது இடும்பனாகத் தான் இருக்க வேண்டும். எங்கே மாட்டினீர் அவனிடம்...
வ: வரும் வழியில் ஒரு புளியமரம் இருந்தது அதன் கீழ் நின்றிருந்தார். ஆமாம் இந்த ஊரில் பல புளியமரங்கள் உள்ளதோ.... இதோ இந்த தெரு முனையில் கூட அதே போன்று ஒரு புளியமரம் இருக்கிறது...
ச: இந்த ஊரில் உள்ள ஒரே புளியமரம் இது தான் ஐயா. புளிய மரம் வளர்த்தால் பேய் பிடிக்கும் என்ற மூட நம்பிக்கையால் எல்லா புளிய மரத்தையும் எங்கள் ஊர் பஞ்சாயத்து சார்பில் வெட்டி விட்டனர். அந்த புளிய மரம் கண்டீர்களே, அது இடும்பனின் நிலத்தில் உள்ளது. அவனை சென்று கேட்க ஊராருக்கு அச்சம். அதுதான் அதை மட்டும் விட்டு வைத்திருக்கின்றனர்.
அப்போது தான் புரிந்தது வர்த்தகருக்கு, இடும்பன் தன்னை தான் விசாரித்த அதே இடத்திற்கு சுற்று வழியாய் அழைத்து வந்தது.
அடடா, இவ்வளவு இடுக்கண் ஒரே நேரத்தில் தர ஒருமனிதனால் எப்படி முடிகிறது! என்று வியந்தார் வர்த்தகர்.
ஒரு முடிவுக்கு வந்தார்... அவனுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும்....
சில நாள் கழித்து ஒரு மூட்டையை தூக்கிக் கொண்டு மாறுவேடத்தில் அதே ஊருக்கு வந்தார். வந்தவர் செல்லூர் வழியை இடும்பனிடம் கேட்க, அவனோ, அதே போல ஏமாற்ற திட்டம் தீட்டினான். வர்த்தகரோ, வழியெல்லாம் இந்த மூட்டையை தூக்கியதால், இந்த மூட்டையை இங்கே உங்கள் குடிலின் வெளியே வைத்துச் செல்கிறேன். நாளை செல்லூர் செல்வதற்கு முன் அந்த மூட்டையை நான் எடுத்துக் கொள்கிறேன் என்றார். அவனும் சரி என்று தன் குடிலின் உள்ளே மூட்டையை வைத்தார். இடும்பன் காணாத நேரம் சிறு ஊசி கொண்டு அந்த மூட்டையை குத்திவிட்டார்.
சத்திரம் வந்து அடுத்தநாள் இடும்பனின் வீட்டிற்கு சென்றார். அங்கே இடும்பனை அழைத்து, ஐயா, எனது மூட்டையை கொடுத்தால் நான் ஊர்செல்வேன் என்றார். இடும்பன் கண்டபோது அந்த மூட்டையில் சாக்குப் பை தவிர வேறு எதுவும் இல்லாததைக் கண்டு அதிர்ந்தான். தான் களவாடிவிட்டோம் என்றல்லவா இந்த வர்த்தகர் நினைப்பார்... வேறு என்ன செய்யலாம் என்று யோசித்து, பின் வெளியே வந்து, ஐயா, நேற்று தான் 4 பேரை புலி காலையில் பீறிப்போட்டதாக தகவல் வந்துள்ளது. ஆதலால் நீங்கள் ஒருசில நாட்கள் தங்கி பின்னர் செல்லுங்கள். அதுவரை உங்கள் மூட்டை என்குடிலில் பத்திரமாக இருக்கட்டும் என்று சொல்ல, வர்த்தகரும் சரியென சென்றுவிட்டார்.
இடும்பனுக்கு என்ன செய்வதெனத் தெரியவில்லை. சாக்குப்பையை திறந்தால் அதனுள்ளே ஒரு நீர்ப்பை மட்டும் இருந்தது. என்ன எடுத்து வந்தார் என்றும் தெரியவில்லை. சாக்குப்பை முழுதும் ஈரமாக இருந்தது.
இடும்பன் ஒரு முடிவிற்கு வந்தான். சொல்லாமல் கொள்ளாமல் ஊரை விட்டே ஒட்டம் பிடிக்க வேண்டியது தான். இல்லை யென்றால் களவு செய்ததற்கு பஞ்சாயத்தில் அவமானப் படவேண்டியது தான். பிடித்தான் இரவோடு இரவாக ஓட்டம்,,,,
அடுத்த நாள் வர்த்தகர் குடிலில் யாரும் இல்லாததை அறிந்து அவ்வூர் பஞ்சாயத்தார் அழைத்து வந்து தான் செய்ததை விவரித்தார். பஞ்சாயத்து தலைவர், இடும்பன் இதுவரை களவாண்டதாக எந்த புகாரும் இல்லை. மக்களுக்கு இன்னல்கள் பல தருவான் ஆனால் களவாட மாட்டானே.., என்றவுடன், வர்த்தகர் சொன்னார்...
ஒரு நீர்ப்பை நிறைய நீர் நிரப்பி அதனை சாக்கு மூட்டையில் போட்டு நன்கு கட்டி அவன் குடிலில் வைத்தேன். நீர்பையை சிறு ஊசியால் குத்தினேன். இரவு முழுவதும் சொட்டு சொட்டாய் நீர் வெளியேறி, மூட்டை முழுவதும் ஈரம் ஆகியது. அதை அறியாது இடும்பன் எடுத்தான் ஓட்டம் என்றார்....
மக்கள் அவரின் புத்திசாலித் தனத்தைக் கண்டு அவரைப் பாராட்டினர்.
இடும்பைக் கிடும்பைப் படுப்பர்க் கிடும்பைக்
கிடும்பை படாஅ தவர்
திருக்குறள் 623
பொருள்:
துன்பம் வந்த போது அதற்காய் வருந்திக் கலங்காதவர் அந்தத் துன்பத்திற்கே துன்பம் உண்டாக்கி அதை வென்று விடுவார்.
முந்தைய நீதி: இடம் தெரிந்து போர் புரிதல்
முந்தைய நீதி: இடம் தெரிந்து போர் புரிதல்
No comments:
Post a Comment