நரியின் ராஜாங்கம்

அடர்ந்த காட்டின் ஒரு பகுதியில் நரியும் அதன் துணைவியாரும் வாழ்ந்து வந்தனர். அப்பகுதியில் ஒரு குரங்குகளும், மான்களும், காட்டெருமைகளும், யானைகள் ஆகிய பெரிய விலங்கினங்கள் வசித்தன.

சிங்கம், புலி போன்றவை காட்டின் வேறு பகுதியில் இருந்தன. ஆனால் இப்பகுதியில் வாழ்ந்த ஒரே புலால் உண்ணி நரி தான். நரியோ தன் பகுதியை தனி ஆட்சியாகவே செலுத்தி வந்தது. ஒரு நாள் காட்டெருமை வந்து நரியிடம், "இரவில் ஏதேதோ சத்தம் கேட்கிறது, எங்கள் காட்டெருமை கூட்டத்தார் பயப்படுகின்றனர்." என்றது.

இதென்ன புதுபுரளியா இருக்கு... நம் பகுதியில் நள்ளிரவில் ஏதோ சத்தமாமே... என நரியாரும் துணைவியாரும் ஒருவரை ஒருவர் முகம் பார்த்தனர்.

நரியார் காட்டெருமையிடம் தன் அச்சத்தைக் காட்டாமல், "எருமையாரே, நான் என்ன என விசாரிக்கறேன். நீங்க போய் அமைதியா இருங்க", என்றது.

ஒரிருநாள் கழித்து மான் கூட்டத்தின் தலைவன் நரியிடம் வந்து, "நாங்கள் புல்வெளியில் உணவு தேடிச் சென்றோம். நம் பகுதிக்கு ஏதோ ஒரு கொடிய மிருகம் வந்துள்ளது. புல்வெளியில் மிகப்பெரிய காலடித்தடங்களைக் கண்டோம். நாங்கள் யானை தடமோ என யானை தலைவரிடம் விசாரித்தால் அவரின் கூட்டம் அப்பக்கம் வரவில்லை என சொல்கிறார்." என்றது.

இதென்னடா புதுசா இருக்கே, புது மிருகமாமே... என வியந்த நரியார், மானிடம் சொன்னது, "நான் என்ன என விசாரிக்கறேன். நீங்க போய் அமைதியா இருங்க", என்றது.

சில நாட்கள் கழித்து யானைக்கூட்டத் தலைவன் வந்து நரியாரிடம், "நரியாரே, யாரோ நம் காட்டில் அத்து மீறி நுழைந்துள்ளனர். எங்கள் வசிப்பிடம் அருகே உள்ள தேனீக்கூட்டை கலைத்திருக்கின்றனர். அதனால் தேனீக்கள் ரீங்காரமிட்டு எங்களுக்கு தொல்லை தாங்க முடியவில்லை." என்றது.

இது மூன்றாவது புகார் என்றதால் நரியார் சற்றே பயந்தது. அப்போது அங்கே வந்த குரங்கு சொன்னது, "யானையார் சொன்னது சரிதான். நானும் சில நாட்களாக சொல்ல நினைத்தேன். நாங்கள் மழைகாலத்திற்காக சேர்த்து வைத்த உணவுப் புதையலில் சில பழங்களைக் காணவில்லை" என்றது.

பகுதியில் வசிக்கும் எல்லா பெரிய விலங்குகளுக்கும் ஆபத்து என்றதும் நரியார் சொன்னது, "நான் போய் அரசனிடம் முறையிடுகிறேன். யார் உள்ளே வந்தனர் என நாம் கண்டறிய வேண்டும்."

நரியார் நேரே சிங்கத்திடம் சென்று நடந்ததை எல்லாம் முறையிட்டது. அப்போது சிங்கம் "உன் பகுதி அது. நீ தான் அதற்கு பொறுப்பு. வேறு விலங்குகள் ஏதும் நீ பார்த்தால் உடனே தெரிவி, நான் வந்து போரிடுவேன்" என்றது.

நரியார் தன் சிறுகுகைக்கு திரும்பியது. திரும்பியதும் தன் பகுதிவாழ் பெரிய விலங்குகளை கூடிப்பேச அழைத்தது.

நரியார் தன் குகையின் வெளியே ஒரு பெரிய கல்லின்மேல் அமர்ந்தது. மற்ற கூட்டத்தின் தலைவர்கள் கூடி வந்தனர்.

நரியார் சொன்னது, "நாம் ஐந்து கூட்டமுமே இப்பகுதியில் வசிப்பவர்கள். இப்பகுதிக்கு ஏதும் எதிரி தாக்குதல் இருந்தால் நாம் தான் முதலில் நேரடியாக போராட வேண்டும். நான் அரசனிடம் போய் முறையிட்டேன். அவரும் அதையே தான் சொன்னார்."

ஐவர் காவல் குழு அமைக்கப்பட்டது. அனைவரும் பகுதி பகுதியாக தங்களுக்குள் பிரித்து இரவில் ரோந்து சென்றனர்.

சில நாட்கள் உருண்டோடின. ஒரு நாள் விடியலில் ஏதோ விநோதமான சத்தம் கேட்டு விழித்தது நரி. சத்தம் வந்த இடத்தை நோக்கிச் சென்றது. அங்கே ஒரு சிறிய குரங்கு மூங்கில் காடுகளில் விளையாடிக் கொண்டிருந்தது. மேலே கீழே குதித்து ஆட, அங்கே இருந்த மூங்கில்கள் ஒன்றோடு ஒன்று உரச, வீசிய காற்றோ மூங்கிலிடையே விநோதமான சத்தத்தை உண்டாக்கியது. அக்குரங்கை தன் அருகே வருமாறு பணித்தது நரி. குரங்கோ பயந்து போய் நரிஅருகே உள்ள மரத்தின் மேல் நின்றது.

"நீ யார்?" எனக்கேட்ட நரியிடம் குட்டிக்குரங்கு சொன்னது, "நான் பக்கத்துப் பகுதியில் இருக்கும் குரங்கு கூட்டத்தில் வசிக்கிறேன். அங்கே இவ்வகை மூங்கில் காடு இல்லை. அதனால் தான் இங்கே வந்து விளையாடுகிறேன்."

தன் பகுதி வாழ் குரங்குகளின் தலைவனை அழைத்தது நரி. அவர் வந்து அக்குட்டி தன் சொந்தக்காரன் தான் என உறுதி செய்தது தலைவன். "சரி, விநோதமான சத்தம் எங்கிருந்து வந்ததென தெரிந்து விட்டது. தேனீக்கூடும் கால்தடங்களும் மட்டுமே கண்டறியப்பட வேண்டி உள்ளது." என்றது நரி.

அக்குட்டி குரங்கு சொன்னது, "என் சின்ன மச்சான் என்னோடு வந்தான். அவன் விளையாட்டாய் ஒரு பனம்பழத்தை மரத்தின் மேல் விட்டெரிய அது அசம்பாவிதமாக தேனீக்கூட்டில் பட்டுவிட்டது. நாங்கள் வேண்டுமென்றே செய்யவில்லை." என்றது.

அப்போது நரி, "அப்போ புல்வெளிகளில் கால்தடங்களும் உங்க வேலை தானா?" எனக் கேட்க, குட்டி குரங்கோ தலை கவிழ்ந்து "ஆம்!" என்றது.

எப்படிப்பா பெரிய கால்தடங்கள் செய்தீர்கள் எனக்கேட்க, குரங்கு "நாங்கள் விளையாடினோம், அப்போது என் மச்சான் ஒரு சிறிய மரத்தை தன் கால்களில் கட்டியிருந்தான். அவனுடைய காலில் கட்டிய மரக்காலணி தடங்களே அவை" என்றது.

அடடா, இவ்வளவு தானா, எனக்கேட்டறிந்த நரி சொன்னது, "சரிப்பா. இனி இங்கே விளையாடினால், உன் குரங்கு கூட்டத்திடம் ஒரு வார்த்தை சொல்லிட்டு ஆடுப்பா." எனச்சொல்லி கோட்டாவி விட்டுக்கொண்டே தூங்கச் சென்றது நரி.

இந்த கதைக்கான கரு வந்த செய்யுள் பார்ப்போமா

எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு - திருக்குறள் 423

பொருள்:

எந்த ஒரு செய்தியைப் பற்றியும் யார் சொன்னாலும் அப்பொருளின் உண்மையை ஆராய்ந்து கண்டுகொள்வதே அறிவார்ந்தவர்கள் செய்யும் செயல்.

முந்தைய நீதி: உண்மையான வலிமை.

No comments:

Post a Comment