உண்மையான வலிமை

அக்கரையில் உள்ள வாழைத்தோப்பில் இருள் கவிய ஆரம்பித்திருந்த நேரம். இக்கரையில் இப்போதோ அப்போதோ என மூதாட்டியின் உயிர் போல் ஊசாலடிக் கொண்டிருந்தது வெளிச்சம். இருள் கவ்வ ஆரம்பிக்கும் நேரத்தில் மாத்தூர் எனும் காவிரிக்கரை கிராமத்தின் ஆலய மண்டபத்தில் இருந்து வறட்சி காலத்தே ஆர்வலர் உண்டியலை குலுக்கியது போல் சிரிப்பலை.

ஆலய மண்டபத்தில் இரு நண்பர்கள் பேசிக்கொண்டிருந்தனர். அவர்களின் பெயர் கதிரவன் மற்றும் தயாளன். இருவரும் ஒரே கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்கள். கதிரவன் வயலில் வேலை செய்து வந்தான். தயாளன் அருகில் உள்ள சிற்றூரில் ஒரு பலசரக்கு கடையில் கணக்குப் பிள்ளையாக இருந்தான்.

கதிரவனுக்கு வயல் வேலையால் நல்ல உடற்பயிற்சி. அதனால் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பான். ஆனால் தயாளனோ தனக்கு கிடைக்கும் உபரி நேரத்தில் சமூக சேவை செய்வதில் ஆர்வம் கொண்டவன்.

இருவரும் மாலை நேரத்தில் ஆலய மண்டபத்தில் சந்தித்து பேசுவது வழக்கம். கதம்ப மலர் போலே எல்லா வகையான செய்திகளும் பேசுவர்.

ஒரு நாள் உடற்பயிற்சி பற்றி பேச ஆரம்பித்தனர். கதிரவன் சொன்னான், உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வது மிக முக்கியம். உன்னை பார், நீ ஒரே இருக்கையில் அமர்ந்திருந்து வேலை செய்கிறாய். என்னைப்பார், நான் வயலில் வேலை செய்வதால் என் உடல் திடமாக உள்ளதே என்றான்.

ஆனால் தயாளனோ உடல் வலிமையை விட மன வலிமையே சிறந்தது என்றான்.

இருவருக்கும் இதில் சிறு வாக்குவாதமே வந்துவிட்டது.

அப்போது அங்கே வந்த அந்த கிராமத்தின் பள்ளியில் தமிழ் ஆசிரியராக இருந்த சுப்பு, "என்னப்பா, ரெண்டு பேருக்கும் இவ்வளவு பெரிய வாக்குவாதம்? அத்தி பூத்தே விட்டதோ?" என்றார்.

இருவரும் தங்கள் பக்க வாதத்தை எடுத்துச் சொன்னார்கள். சுப்பு இருவருக்கும் நடுவராக இருந்து சொன்னார், நாளை ஞாயிறு தானே, இருவரும் சரியாக 11 மணிக்கு கோவில் வாசலுக்கு வந்துவிடுங்கள். ஒரு போட்டி வைத்து மனவலிமையா உடல் வலிமையா என தெரிந்துகொள்வோம் என்றார்.

இருவரும் ஒத்துக் கொண்டு சென்றனர். சுப்புவோ இவர்கள் இருவருக்கும் நல்ல பாடம் புகட்ட நினைத்தார்.

கதிரவன் அதிகாலையே எழுந்து பயிற்சி செய்தான். எந்த போட்டி வைத்தாலும் தன்னால் வென்றிட முடியுமென நம்பினான்.

தயாளனோ தன் மன வலிமையில் நம்பிக்கையாக இருந்தான். இருவரும் சரியாக 11 மணிக்கு ஆலய வாசலில் வந்தனர். ஆனால் வரச்சொன்ன ஆசிரியரையோ ஆளைக் காணவில்லை. பத்து நிமிடம் காத்திருந்தனர்.

பின்னர் காத்திருக்க பொறுமையின்றி கதிரவன் சொன்னான், "நண்பா, நம் இருவருக்குமே தெரியும். எந்த போட்டி வைத்தாலும் நானே வென்றிடுவேன்."

தயாளனோ, "நண்பா, நீ உடல்வலிமை அதிகம் உள்ளவன் தான். ஆனாலும் இந்த போட்டி என்ன போட்டியென தெரியாதே. அதில் ஏதும் மனதிடம் சார்ந்த போட்டி இருக்கலாம்." என்றான்.

இருவரும் காத்திருந்தனர். மற்றொரு பத்து நிமிடம் கழித்து கதிரவன் பொறுமை இழந்தவனாய், "ஒரு வேளை மறந்துவிட்டாரோ என்னமோ, நான் போய் அவர் வீட்டில் பார்க்கிறேன்" என்று புறப்பட்டான்.

ஐந்தே நிமிடத்தில் திரும்பியவன், "அவர் அதிகாலையே பக்கத்து ஊருக்கு போனதாக அவரின் மனைவி சொன்னார்." என்றான்.

அரை மணிநேரம் ஆன போது கதிரவன், "அவர் மறந்து போய்விட்டார். போல தான் தெரியுது. வா நண்பா நாம் போகலாம்." என்றான்.

தயாளன் சொன்னான், "நண்பா, மன வலிமையை சோதிக்கக் கூட இவர் தாமதமாக வரலாம். அதனால் நாம் காத்திருக்காமல் சென்றால் இருவருமே தோற்றவர்கள் ஆவோம்" என்றான்.

நாற்பது நிமிடம் கழித்தே வந்தார் சுப்பு.

வந்தவர், "அட இருவருமே இன்னும் காத்திருக்கிறீர்களா. நல்லது." என்று சொல்லிட கதிரவனோ, "என்ன ஐயா, பதினோரு மணிக்கு வரச்சொன்னீங்க. மணி 11"40 ஆகுது." என எரிச்சலாக சொன்னான்.

"உங்க போட்டி விஷயமாகத்தான் பக்கத்து விருதாவூருக்கு போனேன். போன இடத்தில் கொஞ்சம் தாமதமாயிடுச்சு." என்றார் சுப்பு.

"எங்க போட்டி விஷயமா போனீங்களா!" என்று இருவருமே வியந்தனர்.

"ஆமா, போட்டி என்னன்னா, இருவருமே நடந்து பக்கத்து ஊரில் உள்ள கோவிலுக்கு போய்விட்டு, அந்த பூசாரியிடம் உங்களுக்கென நான் கொடுத்த சீட்டை வாங்கி படிக்கணும். படித்துவிட்டு திரும்ப இங்கேயே வந்திடணும்" என்றார்.

அட, அவ்வளவு தானே என்ற கதிரவன், "நண்பா, இது வேகமாக நடந்து செல்வது பற்றியது தான். நீ தோல்வியை ஒப்புக்கொண்டால் போட்டியே வேண்டாம்" என்றான்.

தயாளனோ, "இல்லை, சீட்டில் ஏதாவது மனவலிமை பற்றிய செய்தி இருக்கலாம். அதனால் போட்டிக்கு நான் தயார்" என்றான்.

சுப்பு இருவரையும் சோதிக்க சில ஏற்பாடுகளை செய்திருந்தார். அவர் பரிசுப் பொருளாக ஒரு வெள்ளி பதக்கமும், ஒரு வெண்கலப் பதக்கமும் வைத்திருந்தார்.

அதை பார்த்த கதிரவன், "ஐயா, எதற்காக இரண்டு பதக்கங்கள்?" என்றான்.

"இருவருமே பூசாரி தரப்போகும் சீட்டில் விஷயம் அறிவீர்கள். ஆயத்தமாகி நடக்க தயாராகுங்கள்." என்றார்.

சரியாக 12 மணிக்கு இருவரும் நடக்கத்தொடங்கினர். சிறிது நேரத்திலேயே வேகமாக சென்ற கதிரவன் தயாளனின் கண்ணில் கூட படவில்லை. ஆனாலும் தயாளனுக்கோ ஏதோ மனதில் சொல்லியது., தான் ஜெயிப்போம் என.
பக்கத்து ஊருக்கு செல்லும் வழியில் பாதி தூரத்தில் வெயிலில் நடந்ததால் ஒரு முதியவர் சுருண்டு விழுந்து இருந்தார். யாரோ எவரோ என நினைத்த கதிரவன் தன் வேகத்தை குறைத்து அவர் அருகே செல்லலாம் எனெ நினைத்தான். அவர் அருகே வரும் போது திரும்பி பார்த்தால் தான் வேகம் குறைத்ததால் பின்னே வேகமாக வரும் தயாளன் நெருங்குவதைக் கண்டான். உடனே, நமக்கு இந்த போட்டியில் வெல்வதே குறிக்கோள் என்று அம்முதியவரை பார்த்தும் பார்க்காதது போல் வேகமாகக் கடந்து சென்றான்.


சிறிது நேரத்தில் பக்கத்து ஊர் கோவிலுக்குச் சென்று பூசாரியிடம் தான் போட்டியாளன் என்றும் சுப்பு தரச்சொன்ன சீட்டையும் கேட்டான்.

அவர் தன் இடுப்பில் உள்ள சீட்டில் மஞ்சள் நிற சீட்டை எடுத்து நீட்டினார்.


அதை எடுத்துப் படித்தால் அதில் சில சொற்கள் எழுதியிருந்தன. அவனுக்கோ அதன் பொருள் புரியவில்லை. சரி. இதில் ஏதோ சூழ்ச்சி இருக்கிறதென நினைத்து, ஊருக்குச் சென்று வாதம் செய்யலாம் என முடிவெடுத்தான். உடனே சென்றான்.

எதிரே தயாளனைக் காணவில்லை. பாதி தூரத்தில் சுருண்டு விழுந்திருந்த அம்முதியவரையும் காணவில்லை.

ஊருக்கு திரும்பிய கதிரவனை கண்ட சுப்பு, "என்னப்பா, சீட்டு வாங்கி வந்தாயா?" எனக்கேட்டார்.

"இதோ இருக்கு சீட்டு." என்று எடுத்துக் கொடுத்தான் கதிரவன். "நான் தானே வென்றேன்," எனக்கேட்ட கதிரவனை, "இருப்பா, தயாளனும் வந்திடட்டும். அப்புறம் வெற்றியாளரை அறிவிக்கிறேன்." என்றார் சுப்பு.

ஒரு மணி நேரம் கழித்து தயாளன் வந்து சேர்ந்தான். அப்போது சுப்பு கேட்டார் "என்னப்பா, சீட்டு வாங்கி வந்தாயா?"

அவனோ சட்டைப்பையில் இருந்து இரண்டு சீட்டுகளை எடுத்து, பூசாரி தந்த சிகப்புச் சீட்டை சுப்புவிடம் கொடுத்தான்.

சுப்புவோ, "இல்லப்பா, இந்த சீட்டு இல்ல. அந்த வெள்ளைச்சீட்டு தாப்பா" என்றார்.

தயாளன், "அந்த சீட்டு பூசாரி கொடுக்கவில்லை. அது மருத்துவர் தந்தது" என்றான்.

"அதை நீ படித்தாயா?" என்று கேட்டார் சுப்பு.

"மருத்துவர் கையெழுத்தெல்லாம் எனக்கு எங்கே புரியப் போகுது." என்றான் தயாளன்.

"சரி, அதையும் கொடு." என்றார் சுப்பு.

கதிரவனோ அக்கறையுடன், "நண்பா, உன் உடம்புக்கு ஏதும் இல்லையே. மருத்துவர் சீட்டு வாங்கி வந்திருக்கே?" எனக்கேட்டான்.

தயாளன் விவரித்தான், "நான் நடந்து சென்ற வழியில் ஒரு முதியவர் சுருண்டு விழுந்திருந்தார். அவரை அருகே இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்று, வைத்தியம் பார்த்தேன். அங்கே மருத்துவர் கொடுத்த சீட்டு தான் இது." என்றான். அந்தச் சீட்டையும் வாங்கிக்கொண்டார் சுப்பு.

பின்னர் இரு நண்பர்களையும் பார்த்த சுப்பு, இருவரிடமும் பூசாரியிடம் வாங்கிய சீட்டில் உள்ள சொற்களை சொல்லச் சொன்னார்.

இருவருமே குழப்பத்தில் இருந்ததால், மறுபடி மறுபடி சீட்டை படித்திருந்தனர். அதனால் மனப்பாடம் ஆன சொற்களை சொன்னார்கள்.

கதிரவன் சொன்னான் "என் சீட்டில் இருந்த சொற்கள், புறத்துறுப் அகத்துறுப் பன்பி யாக்கை, நான்கு சொற்கள்." என்றான்.

தயாளன் சொன்னான் "என் சீட்டில் இருந்த சொற்கள், பெல்லாம் எவன்செய்யும் லவர்க்கு என மூன்று சொற்கள்." என்றான்.

"அட, என் சீட்டில் நான்கு சொற்கள். அப்போ நான் தான் வென்றேன்." என கொக்கரித்தான் கதிரவன்.

அவன் சொல்லி ஆட, அங்கே ஒரு மகிழுந்து வந்து நின்றது. அதிலிருந்து ஒரு நடுத்தர வயதுக்காரரும் ஒரு இளைஞனும் இறங்கினர். அந்த இளைஞன் நேரே தயாளனிடம் சென்று, "ஐயா, நீங்க செய்த உதவி மிகப் பெரிய உதவி. நீங்க இல்லன்னா என் தாத்தா கதி மோசமா ஆயிருக்கும்" என்று சொல்லி, அவனிடம் ஒரு பெரிய பையை கொடுத்தான். வெகுமதி ஏதோ தருகிறார் என்று எண்ணிய தயாளன் வாங்க மறுத்த போது, சுப்பு, "தயாளா, அதை வாங்கிக்கோ. வாங்கினால் தான் நான் தீர்ப்பு சொல்ல முடியும்." என்றார்.

கதிரவனுக்கோ சினம் மேற்கொண்டது. "என்ன இன்னும் தீர்ப்பு பாக்கி இருக்கா?" என்றவன், சினத்தோடு, "நான் தானே போட்டியில் வெற்றி பெற்றேன்?" என்று வினவ, சுப்பு அங்கிருந்த அனைவருக்கும் தீர்ப்பை சொன்னார்.

கதிரவன் உடல் வலிமையில் சிறந்தவன் என்பதில் ஐயம் கடுகளவும் இல்லை. அவன் தான் நேரப்படி நடைப்பயண போட்டியில் வென்றவனாக அறிவிக்க வேண்டும், ஆனாலும்... என்று தயாளன் பக்கம் திரும்பினார்.

அங்கே மகிழுந்தில் வந்த நடுத்தர வயதுக்காரரை சுட்டி "இதோ, இவர் தான் அந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவர்." என்றார்.

"அந்த மருந்துச் சீட்டில் கிறுக்கலாக மருந்துப்பெயர் ஏதோ எழுதியது உண்மைதான். ஆனால் சீட்டில் பின்புறம் என்ன அச்சிடப்பட்டிருக்கு எனப்படிக்கவில்லை நீ." என்றார்.

ஏதோ மருந்துகடை விளம்பரமாக இருக்கும் என அவன் படிக்காமல் விட்டிருந்தான்.

அதை எடுத்துப் படித்தார் சுப்பு.

காலத்தால் செய்த உதவி சிறிதெனினும்
ஞாலத்தின் மானப் பெரிது

இக்குறளைக் கேட்டதும் கதிரவனின் முகம் சுருங்கி விட்டது. அடடா, முதியவரை முதலில் கண்டதோ நான். நானல்லவா அவருக்கு உதவியிருக்க வேண்டும்... என மனதில் நினைத்தான்.

சுப்பு, "அந்த ஏழு சொற்களும் திருக்குறளே. என்றவர் அதனை சரியாக வரிசைப்படுத்தி

புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப் பன்பி லவர்க்கு.

அதன் பொருள் என்னவென்றால்,

அன்பு எனும் அகத்து உறுப்பு இல்லாதவர்க்குப் புறத்து உறுப்புகள் வலிமையாக இருந்து என்ன பயன்?" என்றார்

கதிரவன் உடனே தயாளனை நோக்கி "நண்பா, நீ தான் வென்றாய். வலிமை என்பது உடலில் மட்டுமல்ல, மனதிடம் மட்டுமல்ல, அன்புடைமையே வலிமை என்று நானறிந்தேன்" என்றான்.

உடனே சுப்பு மற்றொரு திருக்குறள் சொன்னார்.

"அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.

வீரச் செயல்களுக்கும் அன்பு துணையாகத் திகழ்கிறது என்பதை அறியாதவர்களே, அறச் செயல்களுக்கு மட்டுமே அன்பு துணையாக இருப்பதாகக் கூறுவார்கள்."

"இப்போ அந்த பையில என்ன இருக்குன்னு பாரு தயாளா..." என்றார்.

தயாளன் பையை திறந்ததும் அதில் சுருண்டு விழுந்த அம்முதியவரின் ஆடைகள் இருந்தன. தயாளன் படபடப்பாக, "பெரியவருக்கு என்ன ஆச்சு?" என்று வினவினான்.

சுப்பு, "அதோ அந்த இளைஞன் தான் அந்த பெரியவர் வேடத்தில் சுருண்டு இருந்தது." என்றார்.

இரு நண்பர்களுக்கும் இப்போது புரிய ஆரம்பித்தது. இது எல்லாமே சுப்புவின் நாடகம் என.

"ஆனால் ஐயா, இதெல்லாம் முன்னாடியே சொல்லியிருக்கலாமே!" எனக்கேட்டான் கதிரவன்.

அப்போது சுப்பு, "சொல்லியிருந்தால் மூன்று குறட்பாக்களை அனுபவித்து கற்றிருப்பீர்களா?" என வினவ, ஆலயத்தில் சிரிப்பொலி விண்ணுயர் கோபுரத்தை முட்டியது.

முந்தைய நீதி: வற்றிய நீரோடையும் அரசன் அமைத்த குழுவும்
அடுத்த நீதி: நரியின் ராஜாங்கம்

No comments:

Post a Comment